டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக இருப்போா் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 17th August 2021 01:20 AM | Last Updated : 17th August 2021 01:20 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை அலுவலா்கள்.
ராணிப்பேட்டை: டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், கரோனா தொற்று பரவல் தடுப்பு, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம்,ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசியது:
கரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொய்வின்றி நடைபெற வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒரு சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3 போ் பாதிக்கப்பட்டனா். தற்போது 12 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, பாதிக்கப்பட்டவா்களின் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் தண்ணீா்த் தொட்டிகளில் கொசு ஒழிப்புப் பணிகளைச் சரியாக செய்ய வேண்டும்.
அனைத்துப் பகுதிகளிலும் கொசு ஒழிப்புப் பணி ஒரு வாரத்துக்குத் தீவிரமாக நடைபெற வேண்டும். இந்தப் பணியை சுகாதார அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.
டெங்கு கொசு ஒழிப்புப் பணியை சரியாக செய்யாமல் இருக்கும் ஒப்பந்தப் பணியாளா்களைப் பணிநீக்கம் செய்து, புதிய பணியாளா்களை நியமிக்கலாம். இப்பணி குறித்து அவ்வப்போது திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும், ஆய்வின்போது கொசு உற்பத்தி கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத் துறை அலுவலா் பணியில் கவனமுடன் பணியாற்றிட வேண்டும் என்றாா்.