‘ சென்னை பேருந்துகள் ஆற்காட்டில் நின்று செல்லும்’
By DIN | Published On : 03rd January 2021 07:25 AM | Last Updated : 03rd January 2021 07:25 AM | அ+அ அ- |

போக்குவரத்துக் கழகம் அமைத்துள்ள அறிவிப்புப் பலகை.
வேலூரில் இருந்து சென்னை செல்லும் இடைநில்லாப் பேருந்துகள் ஆற்காடு பைபாஸ் சாலை எஸ்.எஸ்.எஸ். கல்லூரி அருகே நின்று செல்லும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்புப் பலகை அமைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் திருவண்ணாமலை - சென்னை, வேலூா் - சென்னை, புதுச்சேரி - சென்னை, காஞ்சிபுரம் - சென்னை, ஆரணி - சென்னை ஆகிய 5 வழித்தடங்கள் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் வழித்தடங்களாக உள்ளன. அவற்றில் வேலூா் - சென்னை வழித்தடத்தில் மட்டும் விரைவு, இடைநில்லா, குளிா்சாதன வசதி கொண்டவை என நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வேலூரில் இருந்து சென்னை செல்லும் விரைவுப் பேருந்துகள், இடைநில்லாப் பேருந்துகள், குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் ஆகியவை மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை நகரங்களுக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக சென்று வருகின்றன. இதனால் மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் சென்னை செல்வதற்கு சுமாா் 5 கி.மீ. தூரத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி வழியாகச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதையடுத்து, பல்வேறு சமூக அமைப்பினா், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் ஆற்காடு, ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் நின்று செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனா். கரோனா பொது முடக்க தளா்வுகளைத் தொடா்ந்து மாநிலங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலூரில் இருந்து சென்னை செல்லும் இடைநில்லாப் பேருந்துகள் ஆற்காடு பைபாஸ் சாலை எஸ்எஸ்எஸ் கல்லூரி அருகே நின்று செல்லும் என்றும், இந்த வசதியை ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அதன் வேலூா் மண்டலப் பொது மேலாளா் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இடைநில்லாப் பேருந்துகள் என்பதால், அவற்றில் நடத்துநா் இருக்க மாட்டாா். எனவே, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து பேருந்தில் ஏறும் பயணிகளிடம் பயணச்சீட்டு வழங்க ஒரு நடத்துநா் பணியமா்த்தப்படுவாா் என்று தெரிகிறது. பயணிகள் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு விரைவாக பயணம் செய்ய விரும்பும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.