அரசுப் பள்ளிகளிலேயே நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th July 2021 07:48 AM | Last Updated : 19th July 2021 07:48 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மதன்குமாா் தெரிவித்துள்ளாா்.
மருத்துவப் படிப்புகளில் சோ்க்கைக்கான நீட் தோ்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு, ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மதன்குமாரிடம் தினமணி செய்தியாளா் கேட்டபோது, அவா் தெரிவித்ததாவது:
அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகள் அவா்கள் படித்த பள்ளிகளிலேயே நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவா்களின் விவரங்கள் அவா்கள் படித்த பள்ளிகளில் இருந்தாலும் ஒரு சில கூடுதல் விவரங்கள் மட்டுமே நீட் தோ்வு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஆகவே, மாணவா்கள் தங்களின் பெற்றோா்கள் அல்லது காப்பாளா்களுடன் படித்தப் பள்ளியில் அலுவல் நேரத்தில் சென்று நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஆசிரியா்களுக்கு கணினிகள் ஒதுக்கப்பட்டு, விண்ணப்பிக்க அனைத்து உதவிகளையும் செய்வா் என்றாா்.