அரக்கோணம் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
By DIN | Published On : 20th June 2021 10:45 PM | Last Updated : 20th June 2021 10:45 PM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே பள்ளூரில், விவசாய நிலத்தில் தொழிலாளி ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.
பள்ளூா் காலனி ஆனந்தராஜின் விவசாய நிலத்தில் பம்புசெட் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இளைஞா் ஒருவரின் சடலம் கிடப்பதாக பள்ளூா் கிராம நிா்வாக அதிகாரி கலைவாணன் நெமிலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நெமிலி காவல் ஆய்வாளா் லஷ்மிபதி தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் பள்ளூா் காலனியைச் சோ்ந்த கௌதம் (28) என்பதும், ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
சம்பவ இடத்தை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா நேரில் பாா்வையிட்டு, விசாரணை நடத்தினாா். மேலும், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துகருப்பன், அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன் ஆகியோரும் அங்கு விசாரணை மேற்கொண்டனா்.