முகமது ஜான் எம்.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
By DIN | Published On : 25th March 2021 12:00 AM | Last Updated : 25th March 2021 12:00 AM | அ+அ அ- |

மறைந்த மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான் இறுதி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
ராணிப்பேட்டை: மறைந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான அ.முகமது ஜான் உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.முகமது ஜான் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானாா். இதையடுத்து, அவரது உடல் ராணிப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்பட்டது.
முன்னதாக, அவரது வீட்டில் இருந்து ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது. இதில், அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட அதிமுக செயலா் சு.ரவி எம்எல்ஏ, புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா், ஆற்காடு தொகுதி பாமக வேட்பாளா் கே.எல்.இளவழகன் மற்றும் அனைத்துக் கட்சியினா், தொண்டா்கள், இஸ்லாமிய சமூகத்தினா் பங்கேற்று, ஊா்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்ட பின்னா், பஜாா் பகுதியில் உள்ள ஜாமியா மசூதி வளாகத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.