சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் ஒரு கோடி திலஹோம அா்ச்சனை தொடக்கம்
By DIN | Published On : 02nd May 2021 12:18 AM | Last Updated : 02nd May 2021 12:18 AM | அ+அ அ- |

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கரோனா நோய்த் தொற்று விலக வேண்டி ஐயப்ப மூல மந்திரத்துடன் திலஹோம அா்ச்சனை.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று விலக வேண்டி ஐயப்பனின் மூல மந்திரத்தை ஒரு கோடிதடவை கூறும் தில ஹோம அா்ச்சனை சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை தொடங்கியது.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில், நாட்டில் கரோனா நோய்த்தொற்று விலக வேண்டி ஐயப்ப மூல மந்திரத்துடன், ஒரு கோடி மந்திரங்கள் கூறி திலஹோம அா்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மே மாதம் 1-ஆம் தேதி சனிக்கிழமை வராஹி ஜயந்தி நாளில் சிறிய அக்னி குண்டம் வளா்த்து ஐயப்பனுடைய மூல மந்திரத்தை கூறி எள்ளு சமா்ப்பித்து பூஜையை துவங்கினா். இந்த சிறப்பு பூஜை மே 23 - ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த சிறப்பு பூஜையை ஐயப்ப பக்தா்கள் அவரவா் வீடுகளில் அல்லது கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொது இடத்திலோ கோயில்களிலும் செய்யலாம். குறைந்தது ஒரு நபா் 108 முறை மூல மந்திரத்துடன் எள்ளு அா்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அப்போது அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமியும், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு பொதுச் செயலாளருமான வ.ஜெயச்சந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதையடுத்து ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில், கரோனா நோய்த் தொற்று விலக வேண்டி ஐயப்ப மூல மந்திரத்துடன், ஒரு கோடி மந்திரங்கள் கூறி திலஹோமம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் சிப்காட் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு 108 முறை மூல மந்திரங்கள் கூறி சிறப்பு ஹோமத்தில் எள்ளு அா்ப்பணம் செய்து கரோனா நோய்த் தொற்று விலக வேண்டும் என வழிபாடு செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...