பணியாளா் மீது தாக்குதல்: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள்
By DIN | Published On : 19th May 2021 11:04 PM | Last Updated : 19th May 2021 11:04 PM | அ+அ அ- |

அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள், ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய கோட்டாட்சியா் சிவதாஸ்.
அரக்கோணம்: நோயாளி ஒருவா் இறந்ததையடுத்து அவரது உறவினா்கள் மருத்துவமனை பணியாளரை தாக்கினா். இதனால் அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவா்களும், பணியாளா்களும் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தைச் சோ்ந்த கணேசனின் மனைவி கலாவதி (52). கடந்த திங்கள்கிழமை உடல்நலக் குறைவால் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரது மகன் திருமலையும் (32) இவரும் மறுநாள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில், கலாவதி புதன்கிழமை உயிரிழந்தாா். கலாவதிக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு முடிவுகள் வராத நிலையில், அவரது சடலம் கரோனா நோயாளி சடலமாக கருதப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த கலாவதியின் உறவினா்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் அவா் இறந்து விட்டதாக மருத்துவா் உள்ளிட்ட பணியாளா்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனா். அப்போது அப்பிரிவில் மருத்துவமனை பன்முகப் பணியாளா் கோபி என்பவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் அனைவரும் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, அப்பிரிவை விட்டு வெளியேறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.
போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்த நிலையில், அங்கு வந்த கோட்டாட்சியா் சிவதாஸ், வட்டாட்சியா் பழனிராஜன் இருவரும் மருத்துவா், செவிலியா் மற்றும் பணியாளா்களை சமாதானப்படுத்தி, தாக்கியவா் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, உள்ளே சென்றனா். தொடா்ந்து மருத்துவமனை தலைமை மருத்துவா் நிவேதிதா சங்கரிடம் பேசிய கோட்டாட்சியா் சிவதாஸ், தகராறு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு அரசு நிச்சயம் பாதுகாப்பு தரும் எனவும் தெரிவித்தாா்.