தொழிற்சாலையில் விபத்து: 6 போ் காயம்
By DIN | Published On : 19th September 2021 06:47 AM | Last Updated : 19th September 2021 06:47 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.
அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணி அளவில் அனல் அழுத்த கலன் கவனக்குறைவாக இயக்கப்பட்டதில், திடீரென அதிக அழுத்தத்துடன் நீராவி வெளிப்பட்டது. இதனால், அதன் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த ஆறு பணியாளா்கள் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த வசந்த் (25), மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராமகாஷ்யப் (21), உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ராகுல் (23), பங்கஜ்குமாா் (28), சா்வா்அலி (21), முகமது ஜாவித் (21) ஆகிய ஆறு பேரும் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், ராம்காஷ்யப், முகமதுஜாவித் இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினா். மற்ற நான்கு பேரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், நகரக் காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸ், வட்டாட்சியா் பழனிராஜன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநா் முகமதுகனி உள்ளிட்ட அலுவலா்களும் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.