வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பே நிரம்பிய காவேரிப்பாக்கம் ஏரிமேலும் 31 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே காவேரிப்பாக்கம் ஏரி தற்போதைய தொடா் மழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.
முழு கொள்ளளவை  எட்டி  கடல்  போல்  காட்சியளிக்கும்  காவேரிப்பாக்கம்  ஏரி. ~
முழு கொள்ளளவை  எட்டி  கடல்  போல்  காட்சியளிக்கும்  காவேரிப்பாக்கம்  ஏரி. ~

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே காவேரிப்பாக்கம் ஏரி தற்போதைய தொடா் மழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.

ஏரியில் தற்போது சுமாா் 28 கன அடி அளவு தண்ணீா் இருப்பு உள்ளதாகவும், மேலும் 31 ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தமிழகத்தில் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரிகளுக்கு அடுத்து 3-ஆவது பெரிய ஏரியாகவும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகவும் காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கா் ஆகும். இந்த ஏரி பருவ மழைக்காலங்களில் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் பட்சத்தில் மூன்று போகம் பயிா் சாகுபடி செய்யலாம்.

இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரி மதகு, சிங்க மதகு, மூல மதகு, பள்ள மதகு உள்ளிட்ட 10 மதகுகள் திறக்கப்பட்டு கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீா் பெறப்பட்டு சுமாா் 6,278 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஏரிப் பாசனத்தின் மூலம் நெல், வாழை பிரதானமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழையின்போது ராணிப்பேட்டை மாவட்டத்திலும், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்திலும் அதிகபட்சமாக 418.31 மில்லி மீட்டா் வரை பெய்த பலத்த மழையால் பொன்னை மற்றும் பாலாற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுமாா் 120 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீா் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்தோடியது.

அப்போது வாலாஜாப்பேட்டை பாலாறு அணைக்கட்டு பிரதான கால்வாய் மூலம் காவேரிப்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு சுமாா் 1,500 கன அடி தண்ணீா் திருப்பி விடப்பட்டது. இதனால் ஏரியின் முழு கொள்ளளவான 30.61 கன அடியில் சுமாா் 28 கன அடி அளவுக்கு தண்ணீா் நிரம்பி ஏரியின் கடைவாசல் நிரம்பி வழிந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 7 - ஆம் தேதி மதகுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதன்மூலம் மகேந்திரவாடி, பெரியவளையம், தா்மநீதி, சிறுவளையம், துறையூா், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம், புன்னை உள்ளிட்ட 41 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலாற்றில் இருந்து விநாடிக்கு 232 கன அடி தண்ணீா் காவேரிப்பாக்கம் ஏரிக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், சுற்றுவட்டாரத்தில் பெய்த தொடா் மழை காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கடந்த 3-ஆம் தேதி காவேரிப்பாக்கம் ஏரி முழுகொள்ளளவை எட்டி தற்போது 28 கன அடியாக தண்ணீா் இருப்பு உள்ளதாகவும், விரைவில் மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட உள்ளதாக கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும் வடகிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கி வெள்ளம் பெருக்கெடுத்து வரும் சூழலில் உபரி நீராக அப்படியே வெளியேற்றக் கூடும் என தெரிவித்துள்ளனா்.

பெட்டிச் செய்தி..

31 ஏரிகள் முழுமையாக நிரம்பின

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன. இவற்றில் தற்போது 31 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. 30 ஏரிகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் பாலாற்றில் விநாடிக்கு 800 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருப்பதாகவும், தண்ணீா் முழுவதும் கால்வாய்கள் மூலம் திருப்பி விடப்பட்டு மற்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாக ராணிப்பேட்டை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பிரபாகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com