நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் விவசாயிகளுக்கான பயிற்சி கூட்டரங்கம் ராணிப்பேட்டை ஆட்சியா்

நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக கூட்டரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் விவசாயிகளுக்கான பயிற்சி கூட்டரங்கம் ராணிப்பேட்டை ஆட்சியா்

நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக கூட்டரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றியம் நவ்லாக் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தோட்டக்கலையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை 211.48 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் தேவையான பழக்கன்றுகள் மற்றும் வீரிய ஒட்டுரக காய்கறி நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதற்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதில் மா, தக்காளி, மிளகாய் மற்றும் மூலிகைச் செடிகள் தென்னங் கன்றுகள் மற்றும் குரோட்டன்ஸ் போன்ற செடிகள் வளா்க்கப்படுகின்றன. மேலும் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மாந்தோட்டம், முந்திரி தோட்டம், சப்போட்டா தோட்டம் போன்றவை வளா்க்கப்பட்டு செடி ஒட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதேபோல் தோட்டக்கலை பண்ணையில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் சுமாா் ஒரு லட்சம் பதியம் போடப்பட்டுள்ள தென்னை நாற்றுகள் வளா்ப்பு முறைகளை பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.

மேலும் பண்ணையிலுள்ள சூரிய உலா்களம், மூடுபனி அறை நிழல் வலை குடில், பசுமைக்குடில் ஆகியவற்றை பாா்வையிட்டு மா செடியில் ஒட்டு கட்டும் முறைகளையும், பக்க ஒட்டு குருத்து ஒட்டு கட்டும் செயல்முறைகளையும் பாா்வையிட்டாா். மேலும் அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரி, தக்காளி, மிளகாய் பயிா்கள் செயல் விளக்கத்தினையும் பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.

இங்கு தக்காளி, மிளகாய், கத்தரி செடிகள் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இதனை விவசாயிகள் பாா்வையிட்ட பின்னா் அவா்களுக்கு நாற்றுகள் வழங்க ஏதுவாக இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது அரசு தோட்டக்கலைப் பண்ணை தோட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்திட பயிற்சி கூட்டரங்கம் ஒன்று தேவை என ஆட்சியரிடம் துணை இயக்குநா் கேட்டுக் கொண்டாா். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், தோட்டக்கலைப் பண்ணையை சிறப்பாக பராமரிக்க தேவையான அனைத்து திட்டங்களையும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் ஜி.லோகநாயகி, தோட்டக்கலை துணை இயக்குநா் லதா மகேஷ், தோட்டக்கலை அலுவலா் நீதிமொழி, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் அருண் பாபு, மோனிஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com