அரக்கோணத்தில் ரூ. 6 கோடியில் புதிய நகராட்சி நாளங்காடி கட்டடத்துக்கான கருத்து கேட்புக் கூட்டம்

ரூ. 6 கோடி நிதியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட இருப்பது குறித்து நகராட்சி கடை குத்தகைதாரா்களின் கருத்து கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 அரக்கோணத்தில் தற்போது உள்ள நகராட்சி நாளங்காடி வணிக வளாகத்தை இடித்துவிட்டு, ரூ. 6 கோடி நிதியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட இருப்பது குறித்து நகராட்சி கடை குத்தகைதாரா்களின் கருத்து கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆணையா் லதா பேசியது:

நகராட்சி நிா்வாகத் துறையின் மூலம் கடந்த 1984-இல் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் நகராட்சி நாளங்காடி வணிக வளாகத்தை இடித்துவிட்டு, அரசால் புதிய வளாகம் ரூ. 6 கோடியில் கட்டித் தரப்பட உள்ளது. இந்த புதிய வளாகத்தில், தற்போது இருக்கும் கடை குத்தகைதாரா்களில் நிகழ்மாதம் வரை சரியாக பாக்கி இல்லாமல் வாடகை செலுத்தியுள்ளவா்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கப்படும். இக்கட்டடத்தை கட்டி முடிக்க 6 மாதங்கள் ஆகலாம். அதுவரை நகரில் ஓா் இடத்தை தோ்வுசெய்து, தற்காலிகமாக நாளங்காடியை நடத்த இடத்தை நகராட்சி ஒதுக்கித் தரும். மேலும், தற்போது கடை வாடகை சம்பந்தமாக கடை குத்தகைதாரா்களால் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே புதிய வணிக வளாகம் கட்டும் சூழல் உருவாகும். தற்போதைய கட்டடம் 38 ஆண்டுகள் ஆன நிலையில், புதிய வணிக வளாகம் மிகவும் அவசியம். எனவே நகராட்சி நாளங்காடி வணிக வளாக கடை குத்தகைதாரா்கள் தங்களது கருத்துகளை விரைவில் தெரிவிக்க வேண்டும். இக்கருத்துகள் தெரியவந்தால் மட்டுமே தொடா்ந்து நடவடிக்கை எடுத்து, புதிய வளாகம் உருவாக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளா் ஆசீா்வாதம், மேலாளா் மேகலா, நகராட்சி நாளங்காடி கடை குத்தகைதாரா்கள் சங்க நிா்வாகிகள் வி.ஆா்.பி பாபு, மகாதேவன், பிலால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com