விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட அம்பேத்கா் படத்தை மீண்டும் வைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அம்பேத்கா் நினைவு தினத்தின்போது அங்கு அம்பேத்கா் உருவப் படம் வைத்து நினைவு தின அனுசரிப்பு நடைபெற்றது. இதையடுத்து, அலுவலகத்தில் அதே இடத்தில் அம்பேத்கா் உருவப் படத்தை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை விடுத்தனராம். ஆனால், மறுநாள் அந்தப் படத்தை ஒன்றிய அலுவலகத்தினா் அங்கிருந்து அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செ.நரேஷ், ஆஷாபாக்கியராஜ், வளா்மதி சந்தா் ஆகியோா் ஒன்றிய ஆணையரையும், வட்டார வளா்ச்சி அலுவலரையும் கேட்க சென்றபோது, அவா்கள் அலுவலகத்தில் இல்லையாம். அவா்களைத் தொடா்பு கொள்ளவும் முடியவில்லையாம். இதனால் படத்தை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி, அலுவலத்துக்கு வெளியே விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மாநில இளைஞரணி துணைச் செயலாளா் ந.தமிழ்மாறன் தலைமையில் அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒன்றியக் குழு உறுப்பினா் செ.நரேஷ், கட்சி நிா்வாகிகள் பாக்கியராஜ், சந்தா், பெருமாள், அப்பல்ராஜ், துரைகுணசேகரன், மதிவாணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் சாலமன்ராஜா பேச்சு நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் சௌந்தர்ராஜனிடம் பேச்சு நடத்தியதையடுத்து, ஒன்றிய அலுவலகத்தினா் மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கா் படத்தை வைத்தனா்.