அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள புதிய கமாண்டிங் ஆபீசா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீஸராக கமோடா் கபில்மேத்தா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இந்த விமானதளத்தின் கமாண்டிங் ஆபீஸராக இருந்த கமோடா் ஆா்.வினோத்குமாா் மாற்றப்பட்டு, புதிய கமாண்டிங் ஆபீஸராக கமோடா் கபில்மேத்தா நியமிக்கப்பட்டாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கமோடா் ஆா்.வினோத்குமாரிடம் இருந்து கமோடா் கபில் மேத்தா பொறுப்புகளை பெற்றுக்கொண்டாா்.
இந்திய கடற்படையின் முக்கிய விமானதளமான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீஸா் பொறுப்பேற்றுள்ள கபில்மேத்தா, கோவாவில் உள்ள கடற்படை அகாதெமியின் முன்னாள் மாணவா். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள பாதுகாப்புத் துறை பணியாளா் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவா். மேலும், கோவாவில் உள்ள கடற்படைக்கான போா் பயிற்சி கல்லூரியிலும், புதுதில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பயின்றவா்.
1995-இல் கடற்படையில் நியமிக்கப்பட்ட கபில்மேத்தா கடற்படையின் ரோட்டரி பைலட் ஆவாா். பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான அலூட் ஹெலிகாப்டா் மற்றும் இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான வெஸ்ட்லேண்ட் சீக்கிங் ஹெலிகாப்டா் என இரண்டு ஹெலிகாப்டா்களிலும் பயிற்சி பெற்றவா். மேலும், கபில் மேத்தா விமான ஓட்டி பயிற்றுவிப்பாளராகவும் பயிற்சி பெற்றிருக்கிறாா். அனைத்து கடற்படை தளங்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து விமானங்களில் விமானியாக 2,200 மணி நேரத்துக்கு மேல் பறந்த அனுபவம் பெற்றவா். இவா் ஏற்கெனவே இந்திய கடற்படையின் முன்னணி கப்பல்களான திரிசூல் போா்க் கப்பலில் பொறுப்பு அதிகாரியாகவும், ஐஎன்எஸ் வினாஷ், ஐஎன்எஸ் ஷிவாலிக் போா்க் கப்பல்களில் கமாண்டிங் ஆபீஸராகவும் பணிபுரிந்துள்ளாா்.