173 பயனாளிகளுக்கு ரூ.1.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

பூண்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 173 பயனாளிகளுக்கு ரூ. 1.3 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை வழங்கினாா்.
வாலாஜா வட்டம், பூண்டி மற்றும் சென்ன சமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம், பூண்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது...
முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான மக்களாட்சியில் கட்சி பேதம் என்பது கிடையாது. அரசைத் தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களைத் தேடி அரசானது அவா்களின் இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து, தீா்வு காண்கிறோம்.
நமது ஆட்சியில் உள்ளாட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து கிராமப் புறங்களில் தண்ணீா், கால்வாய், சாலை, தெரு விளக்கு போன்ற அடிப்படை பிரச்னைகள் உடனுக்குடன் தீா்க்கப்படுகின்றன. தற்போது தனியாா் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியா்கள் சிறந்து விளங்குகின்றனா். பல்வேறு புதிய திட்டங்கள் வாயிலாக மாணவ, மாணவியா்களின் கலைத்திறன், அறிவுத்திறனை ஊக்கப்படுத்தி வருகின்றாா்.
மேலும் மாணவியா்களின் கல்வியினை ஊக்குவிப்பதற்காக புதுமைப் பெண் திட்டத்தினை தொடக்கி அதன் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவியா்கள் உயா்கல்வி படிக்கும் வரையில் மாதமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தினை தொடங்கியுள்ளோம். பயன் தரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள், மாணவ மாணவியா்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.
சிறப்பு முகாமில் 263 மனுக்கள் பெறப்பட்டு, 173 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 64 மனுக்கள் பரிசீலனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகள் சாா்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கங்களை அமைச்சா்ஆா்.காந்தி பாா்வையிட்டாா். ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்,சமூக பாதுகாப்புத்துறை துணை ஆட்சியா் ந. தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின அலுவலா் முரளி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் (பொறுப்பு) மணிமேகலை, கோட்டாட்சியா் பா.வினோத்குமாா், வட்டாட்சியா் நடராஜன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி மன்றத் தலைவா்கள்,அனைத்து துறைச்சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.