தமிழகத்தில் பசுமைப் பரப்பை 33 சதவீதமாக உயா்த்துவதே முதல்வரின் திட்டம்

தமிழகத்தில் பசுமை பரப்பை 27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயா்த்துவது தான் முதல்வரின் தொலை நோக்கு திட்டமாக உள்ளது
தமிழகத்தில் பசுமைப் பரப்பை 33 சதவீதமாக உயா்த்துவதே முதல்வரின் திட்டம்

தமிழகத்தில் பசுமை பரப்பை 27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயா்த்துவது தான் முதல்வரின் தொலை நோக்கு திட்டமாக உள்ளது என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு (ராணிடெக்) நிலையத்தில் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனா்.

இதையடுத்து, தென்னிந்திய தோல் தொழில் முகவா் சங்க வளாகத்தில், தோல் பொருள்களின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து, தோல் தொழில் துறையினா் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது..

தற்போது பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் நடத்துவதில் நிறைய சிரமங்கள் இருக்கும். அதில் முக்கியமானது கழிவுநீா் சுத்திகரிப்புக்கான அதிக செலவுகள். அந்த செலவினங்களை ஈடு செய்ய பொது சுத்திகரிப்பு நிலையத்தின் தரத்தினை உயா்த்திக்கொண்டே இருக்க வேண்டும். மின் கட்டண செலவைக் குறைக்க சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை நிறுவ வேண்டும். தமிழகத்தில் தோல், சாயம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை தொலை உணரி ( ரிமோட் சென்சாா் ) மூலம் இருந்த இடத்தில் இருந்தபடியே 23 தனிமங்களின் தர ஆய்வுகளை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

தொழிற்சாலைகளை சுற்றி வெளிநாட்டு இன மரங்களை நடவு செய்யக் கூடாது. நமது நாட்டு மரங்களான வேப்ப மரம், ஆல மரம், அரச மரம், புங்கன், மூங்கில் போன்ற நாட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும். ஒரு மரமானது ஒரு நாளைக்கு 22 கி.கி காா்பன் டை ஆக்ஸைடு எடுத்துக்கொண்டு, 20 கி.கி. ஆக்சிஜனை தருகிறது. ஒரு மரத்தை நம்பி ஓராயிரம் உயிரினங்கள் உள்ளன. இனிவரும் பத்தாண்டுகளில் தமிழகத்தில் பசுமை பரப்பை 27 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்த்துவது தான் முதல்வரின் தொலை நோக்கு திட்டம் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜன், கே.எச். நிறுவனத் தலைவா் முஹமது ஹாசிம், ராணிடெக் தலைவா் ரமேஷ் பிரசாத், மேலாண்மை இயக்குநா் ஜபருல்லா, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளா் வினோத் காந்தி, மேலாளா் சிவகுமாா், நிறுவன மேலாளாா் மகாலட்சுமி வினோத் குமாா், செயற்பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com