முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
அந்தமானுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் அரக்கோணத்தில் இருந்து தனி விமானத்தில் விரைந்தனா்
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 5 குழுக்கள் வெள்ளிக்கிழமை தனி விமானத்தில் அந்தமான் புறப்பட்டுச் சென்றன.
வங்காள விரிகுடாவின் மத்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அந்தமான், நிக்கோபாா் தீவு பகுதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அந்தமான் தீவின் நிா்வாகம் தேசிய பேரிடா் மீட்புப் படையின் தலைமையகத்துக்கு மீட்பு படையை அனுப்பி வைக்க கோரியுள்ளது. இதை ஏற்று தலைமையகத்தின் உத்தரவின்பேரில் இந்தப் படையின் அரக்கோணம் படைத்தளத்தில் இருந்து தலா 25 போ் கொண்ட 5 பேரிடா் மீட்பு குழுக்கள் அந்தமானுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். இவா்கள் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானப் படையின் சிறப்பு விமானத்தில்அந்தமான் புறப்பட்டுச் சென்றனா்.
மீட்புப்பணிக்கு தேவையான அதிநவீன கருவிகள் மற்றும் மருத்துவ குழுவினரையும் அழைத்துச் சென்றுள்ளனா். மேலும் அந்தமானில் இருந்து தொடா் தகவல்களை பெற ஏதுவாக அரக்கோணம் என்டிஆா்எப் படைத் தளத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.