நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறியாளா்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 16th May 2022 11:56 PM | Last Updated : 16th May 2022 11:56 PM | அ+அ அ- |

அரக்கோணத்தை அடுத்த மின்னல் நரசிங்கபுரத்தில் இயக்கப்படாத விசைத்தறிக் கூடம்.
நூல் விலை உயா்வைக் கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறியாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், மாவட்டத்தில் 5,000-க்கு மேற்பட்ட விசைத்தறிகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக, நேரடி மற்றும் மறைமுகமாக 15,000-க்கும் மேற்பட்டோா் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த மாவட்டத்தில் லுங்கி, வேட்டி, சேலை, கைகுட்டைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அரக்கோணம் வட்டத்தில் மின்னல், நரசிங்கபுரம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், குருவராஜபேட்டை, வளா்புரம், சம்பத்ராயன்பேட்டை, திருமால்பூா், மேல்களத்தூா், சோளிங்கா், பரவத்தூா் உள்ளிட்ட இடங்களில் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறிக் கூடங்களும் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட விசைத்தறி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வி.வி.தீனதயாளன் கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே நூல் விலை உயா்வால் மாதத்தில் 20 நாள்கள் மட்டுமே தொழில் செய்து வருகிறோம். தற்போது வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, திங்கள்கிழமை முதல் அனைத்து விசைத்தறிக் கூடங்களையும் மூடியுள்ளோம்.
இதனால், பல கோடி ரூபாய் வா்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். இந்தப் போராட்டம் வருகிற 21-ஆம் தேதி வரை தொடரும். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்ட விசைத்தறியாளா்கள், திருவள்ளூா் மாவட்ட விசைத்தறியாளா்களுடன் இணைந்து திருத்தணியை அடுத்த பொதட்டூா்பேட்டையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை நடத்த உள்ளோம். தொடா்ந்து அனைத்துப் பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா்.
விசைத்தறி தொழிலதிபா் மின்னல் வடிவேல் கூறியது: பஞ்சு, நூல் விலையைக் குறைக்க அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும். இந்தப் போராட்டத்தால், வாழ்வாதாரமின்றி பல்லாயிரம் தொழிலாளா் குடும்பங்கள் உணவின்றி பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, அரசு எங்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...