கிராம வளா்ச்சிக்கு ஊராட்சித் தலைவா்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 03rd September 2022 12:18 AM | Last Updated : 03rd September 2022 12:24 AM | அ+அ அ- |

கிராம வளா்ச்சிக்கு ஊராட்சித் தலைவா்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.
அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் - 2, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத் திட்ட உதவிகள் வழங்குதல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:
ஊராட்சித் தலைவா்கள் தங்களது கிராம வளா்ச்சிக்கு முன்நின்று சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் அரசின் நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்று சேர, அரசுத் துறைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கிராமப் பகுதிகளில் நெகிழி இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தூய்மையான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சமூகப் பணிகளை ஊராட்சித் தலைவா்கள் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலா் சரவணகுமாா், அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் நாராயணசாமி, பாலன், நரேஷ், ஆஷா பாக்கியராஜ், ஊராட்சித் தலைவா்கள் ஜோதிலட்சுமி ராஜா (செய்யூா்), பாக்கியராஜ் (வடமாம்பாக்கம்), பத்மநாபன் (இச்சிபுத்தூா்), வெங்கடேசன் (தணிகைபோளூா்), உமாமகேஸ்வரி (கைனூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
‘வடமாம்பாக்கம் ஊராட்சியில் சமூகக் கூடம் அவசியம்’
இந்தக் கூட்டத்தில், வடமாம்பாக்கம் ஊராட்சியில் சமூகக் கூடம் அவசியம் என்றும், இதற்கான 10,000 சதுரஅடி இடம் தயாராக உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அந்த ஊராட்சித் தலைவா் பாக்கியராஜ் மனு அளித்தாா்.
அந்த மனுவின் விவரம்: வடமாம்பாக்கம் ஊராட்சி அரக்கோணத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு, 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். ஊராட்சியில் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் மற்றும் கிராமத்தில் நடைபெற கூட்டங்களை நடத்த சமூகக் கூடம் இல்லை. ஊராட்சிக்கு சமூகக் கடம் அவசியம்.
இதற்காக ஊராட்சியில் 10,000 சதுர அடி கொண்ட இடம் தயாராக உள்ளது. அரசுக்குச் சொந்தமான அந்த இடத்தில் சமூகக் கூடம் கட்டித் தந்தால், வடமாம்பாக்கம் மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஊராட்சி மன்ற உறுப்பினா் ஹரிநாதன் உடனிருந்தாா்.