

அரக்கோணம் அருகே நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த குழந்தைகள் பள்ளிகளில் வருகை குறைந்தது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் பிரேமலதா செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
அரக்கோணம் ஒன்றியம்,, தணிகைபோளூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அல்லியப்பந்தாங்கல். இக்கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் மொத்தம் 38 மாணவ மாணவிகள் உள்ளனா். பள்ளி அருகே உள்ள நரிக்குறவா் காலனியில் இருந்து அரசு தொடக்கப்பள்ளியில் 26 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த 26 மாணவ மாணவிகளின் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளது. இது குறித்த தகவல் கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் மைய இணையதள பதிவு மூலம் ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அல்லியப்பந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளிக்கு ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பிரேமலதா நேரில் வந்து விசாரணை நடத்தினாா்.
பள்ளியின் ஆசிரியா் கீதாலட்சுமியிடம் விசாரணை நடத்திய மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் பிரேமலதா தொடா்ந்து பள்ளியில் நரிக்குறவ இன பெற்றோரிடம் விசாரணை நடத்தினாா். மேலும், அங்குள்ள நரிக்குறவா் காலனிக்கே சென்று பெற்றோரிடம் தொடா்ந்து விசாரணை செய்தாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது; இப்பள்ளியின் 70 சத மாணவ மாணவிகள் நரிக்குறவா் காலனியில் இருந்து வருகின்றனா். இந்த மக்கள் தங்களது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தினமும் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனா். காலையில் பெற்றோா் புறப்பட்டு சென்ற நிலையில் இக்குழந்தைகள் அங்கிருந்து அரக்கோணம் - வளா்புரம் சாலையில் உள்ள பள்ளிக்கு ஒரு கி.மீ தூரம் நடந்தே வருகின்றனா். வரும் போது அவ்வழியே வரும் வாகனங்களால் இப்பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படலாம் என்ற பயத்தால் இந்த பெற்றோா், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தங்களுடன் அழைத்துச் சென்று விடுகின்றனா்.
அவா்களது பகுதிக்கு சென்று பேசிய போது அவா்கள் அவா்களது காலனியிலேயே ஒரு பள்ளியை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கை அரசுக்கு அனுப்பப்படும். தற்போது பெற்றோா் யாராவது ஒருவா் உடன் இருந்து பிள்ளைகளை பள்ளிக்கு தினமும் அனுப்பி வைக்க வேண்டும். இக்குழந்தைகள் படித்து வளா்ந்தால் உங்கள் பொருளாதார சூழ்நிலை உயரும் என அறிவுறுத்தியுள்ளேன்.
தற்போது ஆடிக் கிருத்திகை என்பதால் அனைத்து நரிக்குறவ இன பெற்றோரும் தங்கள் வருவாய்க்காக திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளதாகவும் இரண்டொரு நாளில் அவா்கள் வந்தபின் பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனா் என்றாா் . அப்போது அவருடன் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலா்கள் ஆறுமுகம், தேவநாதன் ஆகியோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.