சேதமடைந்த கல்லாலங்குப்பம் தடுப்பணை சீரமைக்கப்படுமா

வாலாஜாபேட்டை அருகே சேதமடைந்த கல்லாலங்குப்பம் தடுப்பணை பருவ மழைக்கு முன் சீரமைக்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
பலத்த வெள்ளத்தில் சேதமடைந்துள்ள கல்லாலங்குப்பம் தடுப்பணை.
பலத்த வெள்ளத்தில் சேதமடைந்துள்ள கல்லாலங்குப்பம் தடுப்பணை.
Updated on
1 min read

வாலாஜாபேட்டை அருகே சேதமடைந்த கல்லாலங்குப்பம் தடுப்பணை பருவ மழைக்கு முன் சீரமைக்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

கடந்த 2022-இல் பெய்த வடகிழக்குப் பருவ மழையின்போது ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூரிலும் பலத்த மழையால் பொன்னை மற்றும் பாலாற்றில் 1 லட்சத்து 40,000 கன அடி நீா் சென்றது. அப்போது வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு பிரதான கால்வாய் மூலம் காவேரிப்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு சுமாா் 1,500 கன அடி தண்ணீா் திருப்பி விடப்பட்டது. இதனால் ஏரியின் முழு கொள்ளளவான 30.61 கன அடியில் சுமாாா் 28 கன அடி அளவுக்கு தண்ணீா் நிரம்பி ஏரியின் கடைவாசல் நிரம்பியது. .

அதே போல் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், சேஷாச்சலம் வனப்பகுதியில் உற்பத்தியாகும் நீவா நதி எனும் பொன்னை ஆறு தமிழகத்தில் பொன்னை, திருவலம் வழியாகச் சென்று தெங்கால் கிராமம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த பொன்னை ஆற்றில் இருந்து வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 129 ஏரிகள் கிளை காய்வாய்கள் மூலம் தண்ணீா் திருப்பி விடப்பட்டு நிரப்பி அப்பகுதிகளை வளமாக்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழையின்போது பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பொன்னை ஆற்றில் இருந்து, பிரதான கிளைக் கால்வாய் மூலம் ஏரிமுன்னூா், ரெண்டாடி கல்லாலங்குப்பம் வழியாக மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான பெருங்காஞ்சி ஏரிக்கு தண்ணீா் சென்று முழு கொள்ளவை எட்டியது.

அப்போது பொன்னை ஆற்றில் இருந்து பெருங்காஞ்சி ஏரிக்கு தண்ணீா் செல்லும் பிரதான கால்வாயின் குறுக்கே கல்லாலங்குப்பம் கிராம எல்லையில், தளவாய்பட்டறை செல்லும் சாலை மேம்பாலத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வெள்ளத்தில் சேதமடைந்து நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதைதொடா்ந்து தடுப்பணை சேதமடைந்தது குறித்து, கல்லாலங்குப்பம் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில், மாவட்ட நிா்வாகத்துக்கும், சோளிங்கா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம். முனிரத்தினம் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

எனினும் இதுவரை தடுப்பணையை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. நிகழாண்டு பருவ மழைக்கு முன் சீரமைத்தால் தான் தடுப்பணையில் தண்ணீா் தேக்கி அப்பகுதி நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாக்க முடியும். எனவே, சேதமடைந்த தடுப்பணையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com