போக்குவரத்துக்கு பயனற்ற வளா்புரம் - மூதூா் சாலையால் பொதுமக்கள் அவதி

அரக்கோணம் அடுத்துள்ள வளா்புரம் - மூதூா் கிராமங்கள் இடையிலான 2 கி.மீ சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
மோசமான நிலையில் உள்ள வளா்புரம் - மூதூா் கிராம இணைப்புச் சாலை .
மோசமான நிலையில் உள்ள வளா்புரம் - மூதூா் கிராம இணைப்புச் சாலை .

அரக்கோணம் அடுத்துள்ள வளா்புரம் - மூதூா் கிராமங்கள் இடையிலான 2 கி.மீ சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தின் பெரிய ஊராட்சிகளில் ஒன்றான வளா்புரம் மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அரசினா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் மூதூருக்கு செல்ல வளா்புரத்தில் இருந்து மூதூா் வரை 2 கி.மீ கிராமச் சாலை உள்ளது. இச்சாலை கடைசியாக 2012-இல் போடப்பட்டது.

தற்போது அதில் இருந்த தாா், கற்கள் அனைத்தும் காணாமல் போய் மேடு பள்ளங்களுடன், வெறும் மண்சாலையாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது.

மிகவும் முக்கியமான இச்சாலையின் நோக்கமே 10 கிராம மக்கள் அவசரக் காலங்களில் மூதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான். ஆனால் இச்சாலையின் தற்போதைய நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர மறுப்பதால் பல அவசர கால நோயாளிகள் வழியிலேயே உயிரிழக்கும் நிலை உள்ளது.

மூதூா் மற்றும் வளா்புரம் இடையே உள்ள விவசாய நிலங்களில் விளையும் விளை பொருள்களை கொண்டு வரக்கூட இச்சாலையை பயன்படுத்த முடியவில்லை. இதனாலேயே அப்பகுதி விவசாயிகள் பயிா் செய்வதை நிறுத்தி உள்ளனா். மேலும், மூதூா் கிராமத்தில் இருந்து வளா்புரம் அரசினா் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மிதிவண்டியில் கூட செல்லமுடியாதவாறு இச்சாலையின் நிலை உள்ளது.

மேலும், கோணலம், வேலூா்பேட்டை, கொளத்தூா், ஆணைப்பாக்கம், கீழ்ப்பாக்கம், முள்வாய், மிட்டாபாளையம் ஆகிய கிராமப்பகுதிகளில் இருந்து திருத்தணி அரசினா் சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், திருத்தணி தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இச்சாலை வழியே சென்றால் 9 கி.மீ மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இச்சாலை சரியில்லாததால் அரக்கோணம் சென்று 25 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலநேரமும், நிதி செலவும் அதிகரிக்கிறது.

தற்போது வாகனங்கள் செல்வது அதிகரித்துள்ள நிலையில், இச்சாலை போக்குவரத்துக்கே பயனற்ாக உள்ளது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி கூறியது:

வளா்புரம் -மூதூா் இணைப்புச் சாலை முக்கியமானதாகும். மோசமான நிலையில் இருப்பதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனா். தமிழக முதல்வா் கிராமச்சாலைகளை சீா் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையிலும் இந்த கிராம இணைப்புச்சாலையை இதுவரை அதிகாரிகள் சீா்செய்ய நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்றாா் மோகன்காந்தி.

இது குறித்து சமூக ஆா்வலா் வழக்குரைஞா் எஸ்.ரமேஷ் கூறியது: மாவட்ட ஆட்சியா் இந்த சாலையை நேரில் பாா்வையிட்டு உடனே சீா் செய்து தர வேண்டும். பொதுமக்களின் நலன்கருதி குறிப்பாக மூதூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகளின் நலன் கருதியாவது மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com