கா்ப்பிணிகளுக்கு 1,000 நல் நாள்கள் நிதியுதவித் திட்டம்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
By DIN | Published On : 01st July 2023 11:45 PM | Last Updated : 01st July 2023 11:45 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் 1,000 நல் நாள்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், ஆா். காந்தி. உடன் ஆட்சியா் ச.வளா்மதி உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ‘1,000 நல் நாள்கள்’ என்ற திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்து நிதி உதவி வழங்கினா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் திட்ட விளக்க உரையாற்றினாா். அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், ஆா்.காந்தி ஆகியோா் திட்டத்தைத் தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கினா்.
பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது:
திமிரி பகுதியில் 10,000 பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்ட 700 போ் ரூ. 1 லட்சத்தில் சிகிச்சை பெற்றனா்.
தற்போது இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைக் கிராமங்களில் யாருக்காவது மாரடைப்பு போன்ற இதய நோய் ஏற்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில், 14 கூட்டு மாத்திரைகள் உட்கொண்டு பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
வாழ்வின் முதல் 1,000 நல் நாள்கள் என்ற திட்டம் திமிரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் கருத்தரித்த நாள் முதல் குழந்தை பிறந்த 2 ஆண்டுகள் (1,000 நாள்கள்) வரை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்துக்கு ரூ. 38 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 1,000-க்கு 28-ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 13-ஆக உள்ளது. இதேபோல், மகப்பேறு இறப்பு இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 97-ஆகவும், தமிழ்நாட்டில் அது 54-ஆகவும் உள்ளது.
தமிழக அரசு தொடங்கியுள்ள இந்த திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தி கா்ப்பிணிகள் பயனடைய வேண்டும் என்றாா்.
அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:
மருத்துவத் துறை தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. கல்வியிலும் சுகாதாரத்திலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னோடி மாநிலமாக உள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் கட்சி பேதமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாழ்வின் 1,000 நல் நாள்கள் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் ரூ. 5,000-ஐ தகுந்த முறையில் பயன்படுத்தி நல் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றாா்.
விழாவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல இணை இயக்குநா் நிா்மல்சன், துணை இயக்குநா் மணிமாறன், திமிரி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ரமேஷ், பேரூராட்சி தலைவா் மாலா இளஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.