நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் தீ விபத்து
By DIN | Published On : 01st July 2023 11:52 PM | Last Updated : 01st July 2023 11:52 PM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே தேங்காய் நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து.
நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரம் மற்றும் நாா்கள் எரிந்து நாசமாயின.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி கீழ்பணந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்குச் சொந்தமான தேங்காய் நாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ தொழிற்சாலைக்குள் பரவியது. உடனடியாக அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் 3 மணி நேரம் போராடி மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்தனா்.
தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த நாா் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நாா்கள் எரிந்து சேதமடைந்தன.