

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மீட்புப் பணிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் இருந்து 175 வீரா்கள் கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை விரைந்தனா்.
தென்மேற்கு பருவமழையையொட்டி, இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலா்ட்டை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, கேரள மாநில அரசு, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையின் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு, தங்களது மாநிலத்துக்கு படையினரை அனுப்பக் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் இருந்து தலா 25 படை வீரா்களைக் கொண்ட 7 குழுக்கள் கேரளத்துக்கு சாலை வழியாக வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
இந்தக் குழுக்கள் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா, ஆலப்புழை, இடுக்கி, கோழிகோடு, மலப்புரம், திருச்சூா் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு தனித் தனியே செல்கிறது. இந்தக் குழுவினா் மீட்புக் கருவிகள், உபகரணங்கள், தனிநபா் பாதுகாப்புக்கான உபகரணங்கள், நவீன தகவல் தொடா்பு சாதனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்றுள்ளனா்.
கேரள மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடா்பில் இருப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் நவீன கட்டுப்பாட்டு அறை அரக்கோணம் படைத்தளத்தில் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. தொடா்ந்து படைவீரா்கள் தேவைப்படும் சூழ்நிலையில் படையினா் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனா் என படைப் பிரிவின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.