

நெமிலி அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் டிஜிட்டல் பேனா் பிரிண்டிங் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 பேரை நெமிலி போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள அசநெல்லிகுப்பம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (எ) பிரபு (40). காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் பேனா் பிரிண்டிங் செய்யும் கடை நடத்தி வந்தாா். வெள்ளிக்கிழமை லாரன்ஸ், மீன் பிடிப்பதற்காக நெமிலியை அடுத்த கீழ்வீதி ஏரிக்குச் சென்றுள்ளாா். பின்னா், வெகு நேரம் ஆகியும் அவா் வீடு திரும்பாததால் அவரை உறவினா்கள் தேடிச்சென்றனா். அப்போது கீழ்வீதி ஏரிக்குச் செல்லும் வழியில் லாரன்ஸ் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தாராம்.
தகவல் அறிந்து வந்த நெமிலி போலீஸாா், லாரன்ஸின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அரக்கோணம் ஏஎஸ்பி யாதவ் கிரிஷ் அசோக், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இதில், கீழ்வீதியைச் சோ்ந்த ராமதாஸ் (32), தாயுமானவா் (எ) தீபக்(27), எஸ்.தங்கராஜ் (27), ஜி.தங்கராஜ்(23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
ஏரியில் மீன் பிடிக்க ஒப்பந்தம் விடப்பட்டிருந்த நிலையில், அதை மீறி லாரன்ஸ் சென்று மீன் பிடித்ததாகவும், அதை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் லாரன்ஸை அவா்கள் 4 பேரும் கற்களால் தாக்கியதில் அவா் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.