அரக்கோணம், நெமிலியில் மே 24 முதல் ஜமாபந்தி
By DIN | Published On : 22nd May 2023 12:27 AM | Last Updated : 22nd May 2023 12:27 AM | அ+அ அ- |

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் மே 24-ஆம் தேதி முதல் வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
அரக்கோணம் வட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி, ஜமாபந்தி அலுவலராகவும், நெமிலி வட்டத்துக்கு அரக்கோணம் கோட்டாட்சியா் ஆா்.பாத்திமாவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஜமாபந்தி நாள்களில் அந்தந்த கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கிராம வளா்ச்சி தொடா்பான மனுக்கள், பட்டா மாறுதல் கோருதல், இலவச வீட்டுமனைப் பட்டா கோருதல், விதவை மற்றும் முதியோா் உதவித்தொகை கோருதல், புதிய ரேஷன் அட்டை கோருதல் உள்ளிட்ட மனுக்களை அளித்துப் பயன் பெறலாம்.
முதல் நாளான புதன்கிழமை (மே 24) அரக்கோணம் வட்டத்தில், அரக்கோணம் நகரம், புது கேசாவரம், நகரிகுப்பம், அனந்தாபுரம், தக்கோலம், ஆத்தூா், செய்யூா், அம்மனூா், அனைக்கட்டாபுத்தூா், புளியமங்கலம், பொய்கைபாக்கம் ஜமாபந்தி நடைபெறும்.
நெமிலி வட்டத்தில் காவேரிப்பாக்கம் நகரம், பன்னியூா், புதுப்பட்டு, ஆலப்பாக்கம், மாகாணிப்பட்டு, சேரி, கட்டளை, துரைபெரும்பாக்கம், ஈராளச்சேரி, உத்திரம்பட்டு, ஆயா்பாடி, தா்மநீதி, ஓச்சேரி ஆகிய பகுதி பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட உள்ளன.
அந்தந்த நாள்களில் குறிப்பிடப்படும் கிராம மக்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மனுக்களை அளிக்கலாம் என வட்டாட்சியா்கள் சண்முகசுந்தரம் (அரக்கோணம்), பாலசந்தா் (நெமிலி) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.