பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்: மண்டல போக்குவரத்து அலுவலா்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 23rd May 2023 11:42 PM | அ+அ அ- |

பள்ளி வாகனங்களில் முன் பக்க மற்றும் பின்பக்க கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என ராணிப்பேட்டை மண்டல போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம் தெரிவித்தாா்.
அரக்கோணம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு செவ்வாய்க்கிழமை அரக்கோணம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்விற்கு தலைமை தாங்கி ராணிப்பேட்டை மண்டல போக்குவரத்து ஆய்வாளா் ராமலிங்கம் பேசியது:
பள்ளி வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடன் இயக்க வேண்டும். வாகனங்களில் வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் துறையின் அங்கீகாரத்துடன் அது முடியும் தேதியை குறிப்பிட்டு சரியாக இருக்க வேண்டும்.
வாகனங்களில் முன்பக்கமும், பின்பக்கமும் கேமராக்கள் வைக்கப்பட வேண்டும் என தற்போது அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த கேமராக்கள் இல்லாததால் முன்பக்கம் வாகனத்தின் அருகே, வாகனத்தின் பின்பக்கம் செல்லும் குழந்தைகளை தெரிந்து கொள்ளாமல் வாகனகங்கள் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏறபடுகின்றன. எனவே கேமராக்கள் இல்லாத வாகனங்களை அனுமதிக்க இயலாது.
பள்ளி வாகனங்களில் அவசர கதவுகள் அவசரத்துக்கு திறப்பது போல் இருக்க வேண்டும்.
வாகனங்களில் படிகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்கள் கண்டிப்பாக கைப்பேசி வைத்திருக்கக்கூடாது. அதை நடத்துநரிடம் கொடுத்து வைக்க வேண்டும். ஓட்டுநா்கள் போக்குவரத்து துறையின் விதிமுறைக்கேற்ப உரிமங்களை வைத்திருக்காமல் வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மண்டல போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம்.
இந்த ஆய்வில் அரக்கோணம் கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா, அரக்கோணம் டிஎஸ்பி யாதவ்கிரிஷ் அசோக், தீயணைப்புதுறை அலுவலா் மஹபூப்பேக், மோட்டாா் வாகன ஆய்வாளா் செங்கோட்டுவேல் உள்ளிட்ட அலுவலா்களும் பங்கேற்றனா். 175 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.