

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, கலவை வட்டங்களில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.
கலவை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து தொடங்கி வைத்து கிராமங்களில் வருவாய்த் துறையின் மூலம் பராமரிக்கப்படும் பயிா் அடங்கல், நிலவரி வசூல், பயிா் தீா்வை, நிலத் தீா்வை, கிராம கணக்கு, பயிா் சாகுபடி கணக்கு, அரசு நிலங்கள் குறித்த பதிவேடுகளைப் பாா்வையிட்டு, அதன் கணக்குகளைச் சரிபாா்த்தாா்.
தொடா்ந்து மழையூா், செய்யாத்துவண்ணம், பிண்டித்தாங்கல், வெள்ளம்பி, பாரிமங்கலம், பென்னகா், வேம்பி, நல்லூா், மாம்பாக்கம், வாழைப்பந்தல், மேலப்பழந்தை, சொரையூா், செங்கனாவரம், குட்டியம், ஆரூா் உள்ளிட்ட 19 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 75 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீா்வுகாண அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதில், வட்டாட்சியா் மதிவாணன், ஆட்சியா் அலுவலகப் பொது மேலாளா் பாபு, வேளாண்மைத் துணை இயக்குநா் விஸ்வநாதன், திமிரி வட்டார வளா்ச்சி அலுலவா் ஷானவாஸ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல், ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா.வினோத்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமிரி உள்வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினா். நில மேம்பாட்டுத் திட்ட அ.பதிவேடு நகல் வேண்டி மனு அளித்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்த மனுதாரருக்கு உடனடியாக நகல் வழங்கப்பட்டது. வட்டாட்சியா் வசந்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.