சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏலகிரியில் கட்டுமானப் பணிகள்
By DIN | Published On : 26th May 2023 11:10 PM | Last Updated : 26th May 2023 11:10 PM | அ+அ அ- |

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரூ. 2 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
தமிழக அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜோலாா்பேட்டை அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சாா்பில் 3,152 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடி 69 லட்சம் 18 ஆயிரத்து 647 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். முன்னதாக ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற தமிழக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை மலரை அமைச்சா் வெளியிட்டாா்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது:
தமிழ்நாட்டில் கோடைகால சுற்றுலாத்தலங்களாக கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களை குறிப்பிடுவா். அடுத்தபடியாக வட மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக ஏலகிரி அமைந்துள்ளது.
ஏலகிரியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால்தான் இந்த இரண்டு கால ஆட்சியிலே ஏலகிரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆா்வலா்களை கவரும் வகையில், தமிழ்நாடு அரசின் சாா்பில் ரூ. 2 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நமது மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக சிறப்பு மனுக்கள் பெறப்பட்டு 4,227 நபா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 850 நபா்களுக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. நரிக்குறவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மே 5-ஆம் தேதி அன்று ஆணை பிறறப்பிக்கப்பட்டு, மே 18 அன்று திருப்பத்தூா் மாவட்டத்தில் 52 நரிக்குறவா் மற்றும் குருவிக்காரா் இனத்தவருக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட நிா்வாகத்துக் தமிழக அரசின் சாா்பில் பாராட்டுகள் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் லட்சுமி பிரேமலதா, கலால் உதவி ஆணையா் பானு, வேளாண்மை இணை இயக்குநா்
பாலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முருகேசன், தாட்கோ மாவட்ட மேலாளா் ராஜஸ்ரீ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குநா் பாத்திமா, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், ஒன்றியக் குழு தலைவா்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.