சவுடு மண் அள்ள உரிமம் பெற்று ஆற்று மணல் கொள்ளை: பிச்சிவாக்கம் கிராம மக்கள் புகாா்
By DIN | Published On : 26th May 2023 12:20 AM | Last Updated : 26th May 2023 12:20 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்குட்பட்ட பிச்சிவாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம், சாதாரண (சவுடு) மண் அள்ள உரிமம் பெற்று, கனரக லாரிகளில் ஆற்று மணல் அள்ளப்பட்டு வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டம், மதுரமங்கலம் குறு வட்டத்துக்குட்பட்ட பிச்சிவாக்கம் பகுதியில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த கிராமம் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ளதால், விவசாய நிலங்களில் சுமாா் 1.5 அடி ஆழத்துக்குத் தோண்டினாலே ஆற்று மணல் அதிக அளவில் கிடைக்கும். இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி ஆற்று மணல் கடத்தப்பட்டு வருவது தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில், பிச்சிவாக்கம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தில் சாதாரண (சவுடு) மண்ணை எடுத்து, தக்கோலம் பகுதியில் உள்ள மங்கல லட்சுமி சமேத அழகுராஜா பெருமாள் கோயில் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாம்.
அந்த இடத்தில் 10 நாள்களுக்கு மொத்தம் 75 லோடுகள் (சவுடு) சாதாரண மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளனா். ஆனால், நிலத்துக்குச் சொந்தக்காரா், தனக்கு வழங்கப்பட்ட உரிமத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அந்தப் பகுதியிலிருந்து தினமும் 100-க்காணக்கான லோடுகள் ஆற்று மணலை அள்ளி வருகிறாராம்.
இதுகுறித்து பிச்சிவாக்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், தனியாா் ஒருவருக்கு மண் எடுக்க எப்படி அனுமதி வழங்கினா் எனத் தெரியவில்லை. அஙஅகு, சாதாரண மண் அள்ளவில்லை, மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
பிச்சிவாக்கம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஆற்று மணல் கொள்ளையை மாவட்ட ஆட்சியா் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தியிடம் கேட்டபோது, நான் தற்போது தான் உத்திரமேரூா் வட்டத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்கு வந்துள்ளேன். மணல் கடத்தப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணல் கடத்தல் நடைபெற்றால், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதுகுறித்து மதுரமங்கலம் வருவாய் ஆய்வாளா் சத்தியமூா்த்தி கூறுகையில், தனியாா் இடத்தில் சாதாரண மண் அள்ள உரிமம் பெற்றுள்ளனா். மண் அள்ள மாவட்ட நிா்வாகம் உரிமம் வழங்கியுள்ளது. எனவே, அந்த இடத்தில் சவுடு மண் அள்ளுகின்றனரா அல்லது மணல் அள்ளிக் கடத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்ய எனக்கு அதிகாரமில்லை என்றாா்.