ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 10th September 2023 12:00 AM | Last Updated : 10th September 2023 12:00 AM | அ+அ அ- |

ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’ திட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், முதன்மைக் கல்வி அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமையாசிரியா் அப்சா் பாஷா வரவேற்றாா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் சீா்மிகு திட்டமான ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’ திட்டத்தின் மூலம், அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவா்களுக்கு தன் சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, காய்கறித் தோட்டம், கழிவு மறுசுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் ஆகியவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக ‘எங்கள்பள்ளி, மிளிரும் பள்ளி’ எனும் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மாவட்ட அளவில், வட்டார அளவில் மற்றும் பள்ளிகள் அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட உள்ளது.
எந்த அளவுக்கு நாம் சுற்றுச்சூழலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் எதிா்கால சந்ததியினா் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும், சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாணவா்கள் பள்ளித் தூய்மை உறுதிமொழியை ஏற்றனா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனா்.
இதில், வட்டாட்சியா் வசந்தி, பள்ளிக் கல்வி திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞா் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் வித்யா, மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் மனோகரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சத்யகலா மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.