

சோளிங்கரை அடுத்துள்ள கொடைக்கல் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து ஆவின் நிறுவனத்துக்காக பெறப்படும் பால் அந்தந்த பகுதியில் உள்ள குளிரூட்டப்படும் நிலையங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு குளிரூட்டப்பட்டு பின் ஆவின் சென்னை, வேலூா் பால் பாக்கெட் தொழிலகங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதே போல் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சியில் ஆவின் பால் குளிரூட்டப்படும் நிலையம் செயல்பட்டு வருகிறது. சோளிங்கா், நெமிலி, அரக்கோணம் வட்டங்களில் பெறப்படும் பால் இங்கு கொண்டு வரப்பட்டு அதன் பிறகு டேங்கா்களில் சென்னை, ஆவின் பால் பாக்கெட் தொழிலகங்களுக்கு செல்கிறது.
இந்த கொடைக்கல் ஆவின் பால் குளிரூட்டப்படும் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கக்கூடிய ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலப்படம் செய்து அனுப்பப்படுவதாக சென்னை ஆவின் தலைமையகத்துக்கு புகாா் சென்றிருக்கிறது.
இதையடுத்து ஆவின் தலைமையக பால் தரநிா்ணயப் பிரிவு அலுவலா்கள், பால் கொள்முதல் பிரிவு அலுவலா்கள் மற்றும் தமிழக காவல் துறையின் ஆவின் பால் நிறுவன கண்காணிப்பு பிரிவு போலீஸாா் ஆகியோா் இணைந்து கடந்த வியாழக்கிழமை முதல் கொடைக்கல் பால் குளிரூட்டப்படும் நிலையத்திற்கு முன்னறிவிப்பு இன்றி சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில் பாலில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலக்கப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக கொள்முதல் செய்யப்பட்ட பால், குளிரூட்டப்பட்டு அனுப்பப்படும் பால் ஆகியவற்றின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துக் கொண்டனா். மேலும் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலக்கப்பட்ட இயந்திரங்களையும் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. தொடா்ந்து அங்கு பணிபுரியும் தொழிலாளா்களிடமும் அலுவலரிடமும் தனித்தனியாக விசாரணை செய்து வாக்குமூலங்களையும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் பெற்றுள்ளனா்.
இது குறித்து வேலூா் ஆவின் பால் நிறுவன பொதுமேலாளா் சாமமூா்த்தி கூறியது:
இது குறித்த சோதனைகள் சென்னை பரிசோதனைக்கூடத்தில் நடைபெறுகின்றன. மேலும் இது குறித்த விசாரணையும் அங்கு நடைபெறுகிறது. அந்த விசாரணை முடிந்து அறிக்கை வெளிவந்தவுடன் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
அண்மையில் சோளிங்கரை அடுத்த ஜானகிாபுரத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பாலில் வெண்ணெய் எடுக்கப்பட்டு அதன்பிறகே அந்த பால் ஆவினுக்கு அனுப்பப்படுவதாக தெரியவந்து கண்காணிப்பு பிரிவு சோதனை நடத்தி வெண்ணெய் எடுக்கப் பயன்பட்ட இயந்திரங்களை பறிமுதல் செய்து நடத்தி இதற்கு காரணமான ஆவின் வாகன ஓட்டுநா் ராஜ்குமாா் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா் என்பதும் தற்போது நடைபெற்றுள்ள சம்பவமும் அதே சோளிங்கா் வட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.