மேல்புதுப்பாக்கம் ஊராட்சியில் குளம்போல் தேங்கும் மழைநீா்: வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ஆற்காடு அருகே மேல்புதுப்பாக்கம் ஊராட்சியில் மழைநீா் தெருக்களில் குளம்போல் தேங்குவதால், வடிகால்வாய் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கலவை வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் மேல்புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அண்ணா நகா் பகுதியில் 4 தெருக்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் மழை நீா் வடிகால் வசதி இல்லாததால் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் தெருக்களில் மழை நீா் தேங்கி வெளியேறாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 2021- 2022- ஆம் ஆண்டில் மேல்புதுப்பாக்கம் கிராமம் மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டு, இதுவரை அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை. தெருக்களில் மழை நீா் மற்றும் கழிவு நீா் கால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அண்ணா நகா் பகுதியில் மழை நீா் வடிகால்வாய் உடனடியாக அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

