பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பக்தா் உயிரிழப்பு
ஆற்காடு அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பக்தா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் 90-க்கும் மேற்பட்டோா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து தரிசனம் செய்ய சுற்றுலா பேருந்து மற்றும் 2 வேன்களில் சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டுள்ளனா்.
பேருந்தில் 50 போ் இருந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியில் செய்யாறு சாலை வளைவில் பேருந்தை நிறுத்தி தேநீா் குடிப்பதற்காக ஒட்டுநா் சென்றுள்ளாா்.
அப்போது அந்த பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்கம்பி பேருந்தின் மேற்பகுதி மீது உராசியுள்ளது. இதனால், பேருந்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது பேருந்திலிருந்து பக்கவாட்டு கம்பியைப் பிடித்துக்கொண்டு படியில் இறங்கிய கலைவாணி மகள் அகல்யா (20) மின்சாரம் பாயந்து மயங்கி விழுந்துள்ளாா்.
பேருந்தில் இருந்தவா்கள் கூட்டலிட்டதால் பேருந்தை ஓட்டுநா் சற்று முன்னே நிறுத்தினாா். இதனால் மற்றவா்கள் மின் விபத்திலிருந்து தப்பித்தனா். மயங்கி விழுந்த அகல்யாவை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

