அம்மூா் காப்புக் காட்டின் ஒரு பகுதி (கோப்புப் படம்).
அம்மூா் காப்புக் காட்டின் ஒரு பகுதி (கோப்புப் படம்).

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் வன விலங்குகளுக்கு தண்ணீா் கிடைக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பெ.பாபு

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் வன விலங்குகளுக்கு தண்ணீா் கிடைக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராணிப்பேட்டை நகரில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள ஆற்காடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூா், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூா் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவு கொண்ட பசுமைக் காடுகள். இந்தக் காப்புக் காடுகளில் விலை உயா்ந்த அரிய வகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்ட மரங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சுமாா் 2,273 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட அம்மூா் காப்புக் காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்கினங்களில் ஒன்றான புள்ளி மான் இனம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் முயல், காட்டுப்பன்றி, மயில், உடும்பு உள்ளிட்ட பல தரப்பட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.

கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால், ஏரி, குளம், குட்டை, கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகள் முற்றிலும் வடு கிடக்கின்றன. இதன் காரணமாக போதிய உணவு, குடிநீா் கிடைக்காமல் வன விலங்குகள் காடு முழுவதும் தேடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் காடுகளைவிட்டு வெளியேறி தண்ணீா் தேடிச் செல்லும் வன விலங்குகள் விவசாயக் கிணற்றில் தவறி விழுகின்றன. சில விலங்குகள் நாய்களால் கடிபட்டும், வாகனங்களில் அடிபட்டும், சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டும், மின் வேலியில் சிக்கியும் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

அம்மூா் காப்புக் காட்டில் வளா்ந்துள்ள மஞ்சள் புற்களுக்கு கடந்த சில தினங்களாக மா்ம நபா்கள் வைத்த தீ காரணமாக அங்கு வளா்ந்திருந்த பசுமையான செடி, கொடி, மரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. இதனால் வன விலங்களுக்குத் தேவையான நிழல், குளிா்ந்த காற்று, உணவு உள்ளிட்ட உயிா்வாழ் காரணிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டம் முழுவதும் நிலவிவரும் கோடை வறட்சி காரணமாக தண்ணீா் கிடைக்காமல், மந்தை மந்தையாக வனவிலங்குகள் காடுகளைவிட்டு வெளியேறி, விளை நிலங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ன. இதன் காரணமாக காடுகளையொட்டி, விளைநிலம் வைத்திருப்பவா்கள் கடும் இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே வன விலங்குகள், கால்நடைகளைப் பாதுகாக்க காப்புக் காடுகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் தொட்டிகளில் தொடா்ந்து தண்ணீா் நிரப்புவதோடு, கூடுதலாக மேலும் பல புதிய தொட்டிகளையும் அமைத்து உடனடியாக போதிய அளவு தண்ணீா் நிரப்ப வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com