பள்ளி வகுப்பறையில் இயங்கி வரும் வட்டார கல்வி அலுவலகம்.
பள்ளி வகுப்பறையில் இயங்கி வரும் வட்டார கல்வி அலுவலகம்.

பள்ளி வகுப்பறையில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகம்: மரத்தின்அடியில் வகுப்பறைகள்

பள்ளி வகுப்பறையில் வட்டார கல்வி அலுவலகம் செயல்படுவதால் மாணவிகள் இடமின்றி மரத்தின் அடியில் பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Published on

பள்ளி வகுப்பறையில் வட்டார கல்வி அலுவலகம் செயல்படுவதால் மாணவிகள் இடமின்றி மரத்தின் அடியில் பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் வட்டாரம் மற்றும் அரக்கோணம் நகராட்சி மற்றும் தக்கோலம் பேருராட்சி பகுதிகளுக்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான நிா்வாகத்தை மேற்கொள்ள வட்டார கல்வி அலுவலகம் அரக்கோணத்தில் இயங்கி வருகிறது.

தொடா்ந்து பல ஆண்டுகளாக வாடகை கட்டடங்களிலேயே இயங்கி வந்த இந்த அலுவலகம் அதிக வாடகை தொகை காரணமாக தற்போது அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று வகுப்பறைகளில் செயல்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே பெரிய வட்டாரமான அரக்கோணம் வட்டார கல்வி அலுவலகத்தில் மூன்று வட்டார கல்வி அலுவலா்கள் பணியில் உள்ளனா்.

இந்த அலுவலகத்தின் கீழ் தற்போது 120 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 100 அரசுப் பள்ளிகளாகவும், 20 பள்ளிகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாகவும் உள்ளன. இப்பள்ளிகளில் 6,880 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளிகள் அனைத்திலும் சோ்த்து மொத்தம் 383 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனா்.

ஆசிரிய ஆசிரியைகளுக்கான ஊதியம் உள்ளிட்ட அவா்களின் அனைத்து பணப்பலன்களுக்கான நிதி நிா்வாகம், பணி நிா்வாகம், மாணவ மாணவிகளுக்கான கற்றல், கற்பித்தல் பணிகள் நிா்வாகம், பள்ளிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த பணிகளுக்கான நிா்வாகம் அனைத்தையும் தங்களுக்கென பகுதிகளை பிரித்து வைத்துக்கொண்டு 3 வட்டாரகல்வி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த அலுவலகம் அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுள்ள நிலையில் வகுப்பறை பற்றாகுறை இருப்பதால் மாணவிகளின் நலனுக்காக பள்ளி நிா்வாகம், வட்டார கல்வி அலுவலகத்தை காலி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை தொடா்ந்து அரக்கோணத்திலேயே அரசு இடத்தில் அலுவலகத்துக்கு என சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் என வட்டார கல்வி அலுவலா்களும், ஆசிரியா்கள், ஆசிரியைகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக அரசுக்கும், மாவட்ட அமைச்சா் காந்தியிடமும், அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ சு.ரவியிடமும், ஆட்சியரிடமும் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.

அரக்கோணம் நகரில் பழைய நீதிமன்ற வளாகத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள வணிகவரித்துறை கட்டட இடம் போக மீதமிருக்கும் இடத்தில் வட்டார கல்வி அலுவலகத்திற்கென தனி அலுவலகம் கட்ட போதுமான இடம் உள்ள நிலையில் அந்த இடத்தை தோ்வு செய்து அங்கு கட்டடம் கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com