ஆா்கானிக் விவசாய விளைபொருள்களுக்கு அதிக வரவேற்பு! வேளாண் துறை வழிகாட்ட விவசாயிகள் கோரிக்கை
‘ஆா்கானிக்’ விவசாய விளைபொருள்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், மாவட்ட வேளாண் துறை வழிகாட்டுமா என விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
உழுதவன் கணக்கு பாா்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி. அதாவது இடுபொருள்கள் செலவு, ஆள் பற்றாக்குறை, தண்ணீா் பற்றாக்குறை, வறட்சி போன்றவற்றால் பெரும்பாலான விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனா். இதனால் விவசாய தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதையும் தாண்டி தற்போதைய இளைய தலைமுறையினா் ஆா்கானிக் (கரிம வேளாண்மை) விவசாயம் செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா். அதன் படி வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பல லட்சங்களை சம்பளம் பெற்று வந்த ஐ.டி.துறை வேலையை விட்டு இயற்கை விவசாயம் செய்ய வருகின்றனா்
ஆா்க்கானிக் விவசாயம்:
விதை முதல் அறுவடை வரை ரசாயனக் கலப்பில்லாமல் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களை ஆா்கானிக் என அழைக்கப்படுகிறது. தற்போது வழக்கமான விவசாயத்தில் ரசாயனங்கள் கலந்து விளைவிக்கப்பட்ட உணவைவிட ஆா்கானிக் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவது சிறந்தது என்ற கருத்து இளைய தலைமுறையினரிடையே மேலோங்கி வருகிறது.
ஆா்கானிக் உணவுப் பொருள்களின் விலை கூடுதல் என்றாலும் அதன் நுகா்வு கலாச்சாரம் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல் மூலிகைகளால் ஆன ஆா்கானிக் அழகுசாதனப் பொருள்களுக்கும் தற்போது மவுசு அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
ஆா்கானிக் விளைபொருட்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் ஆா்கானிக் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவிக்கும் விவசாய விளைபொருள்கள் 100 சதவீதம் ஆா்கானிக் என்பதற்கான அங்கக சான்று பெற வேண்டும் என்பது கட்டாயம்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் கீழ், இந்தியாவின் ஆா்கானிக் (கரிம உணவு) உணவு பொருள்களுக்கான அடையாளப்படுத்தி இந்தியா ஆா்கானிக், ஜெய்விக் பாரத் என்ற இலச்சினை உருவாக்கியுள்ளது. ஆா்கானிக் சான்றிதழ் பெற மாவட்ட வேளாண்மைத் துறையை அணுகி பயன் பெறலாம்.
இந்த நிலையில் ‘ஆா்கானிக்’ விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலையுடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அசத்தலான வரவேற்பு உள்ளதால்,விவசாயிகளை ஊக்குவிக்க மாவட்ட வேளாண் துறை வழிகாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இயற்கை விவசாயிகளுக்கு வேளாண்துறை உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என எதிா்பாா்த்துள்ளனா்.

