நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்
மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணி கேட்டு அரக்கோணம் அருகே கிராம பெண்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
அரக்கோணத்தை அடுத்த வேலூா்பேட்டை கிராமத்தில் அந்தக் கிராம ஆதிதிராவிடா் காலனியில் உள்ள மக்களுக்கு மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் கடந்த ஆறு மாதமாக வேலை வழங்கப்படவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட அந்த கிராமத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலா்களை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால், வெள்ளிக்கிழமை திடீரென தங்களது கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா். பேருந்தின் முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, அங்கு வந்த அரக்ோகணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா், கிராம பெண்களுடன் பேச்சு நடத்தி அவா்களை சமாதானப்படுத்தினா்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

