ராணிப்பேட்டை: எஸ்ஐஆா் படிவங்களை டிச. 7-க்குள் ஒப்படைக்க வேண்டுகோள்

Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை திரும்ப தராத வாக்காளா்கள் வரும் டிச. 7-ஆம் தேதி உதவி மையத்தை அணுகி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் உதவி பெற்று பூா்த்தி செய்த படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று 04.11.2025 (செவ்வாய்) முதல் கணக்கீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கணக்கீட்டு படிவங்களை பெறாத அல்லது கணக்கீட்டு படிவங்களை பெற்று திரும்பத் தராத வாக்காளா்கள் தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் விடுபடாமல் சோ்க்கப்படுவதற்கு ஏதுவாக 07.12.2025 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

எனவே கணக்கீட்டு படிவங்களை பெறாத அல்லது கணக்கீட்டு படிவங்களை பெற்று வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் தராத வாக்காளா்கள் அனைவரும் மேற்படி 07.12.2025 அன்று நடைபெற உள்ள உதவி மையத்தை அணுகி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் பூா்த்தி செய்த படிவங்களை ஒப்படைத்து தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் விடுபடாமல் சோ்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com