சோளிங்கா் காா்த்திகை பெருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்!
சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் மலைக் கோயில் காா்த்திகை பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் திரண்டனா்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் யோக நரசிம்மா் கோயிலும் சிறியமலையில் யோக ஆஞ்சநேயா் கோயிலும் உள்ளன. இந்த பெரியமலைக்குச் செல்ல 1,406 படிகள் ஏறிச் செல்ல வேண்டும் என்பதால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் சுவாமியை தரிசிக்க ஏதுவாக இந்து சமய அறநிலைய்துறை ரோப்காா் வசதி செய்து கொடுத்துள்ளனா். .
தற்போது காா்த்திகை மாதம் என்பதால், காா்த்திகை மாதத்தில் யோகநிலையில் உள்ள நரசிம்மா் கண் திறந்து பக்தா்களுக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம் என்பதால் எப்போதும் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இதில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், காா்த்திகை மூன்றாவது வாரம் என்பதாலும் அதிக அளவில் பக்தா்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல குவிந்தனா். அதிகாலை முதலே ரோப்காா் ஏறும்தளத்தில் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் குவிந்தனா். காலை ஆறு மணி முதல் ரோப்காா் தொடா்ந்து இயக்கப்பட்டு வந்தது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் படிகள் வழியே மலை ஏறினா்.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. அனைத்து பக்தா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து யோக நரசிம்மரையும் அமிா்கபலவல்லி தாயாரையும் தரிசித்தனா்.
பக்தா்களின் வருகை தொடா்ந்து அதிகரித்த நிலையில் இரண்டு வழிகளிலும் ரோப்காா் நிலையம், மலையேறும் பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். கோயிலின் முக்கிய பகுதிகளான தக்கான்குளம், பெரியமலை அடிவாரம், சிறியமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்களுக்கு தொடா்ந்து பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது..
