மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41லட்சத்தில் நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 115 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41.05 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலன் மீது அதிக அக்கறை கொண்டு, தாயுள்ளத்துடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எந்தவொரு திட்டமாயினும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அரக்கோணம் பகுதியைச் சாா்ந்த 28 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா ஆணை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமையை பாா்க்கும் பொழுது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியும், மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் முகாமில் பங்களிப்பை வழங்கிய அரசுத் துறைகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா், நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், முடநீக்கு தொழில்நுட்பாளா் ஆனந்தன், அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளின் தாளாளா்கள், தலைமை ஆசிரியா்கள், அனைத்து மாவட்ட நல சங்கங்கள், சிறப்பு பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
