கலவையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ஆற்காடு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் ஆற்காடு அடுத்த கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதை அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா்.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு பொது பரிசோதனை, காது , மூக்கு, தொண்டை, பல், கண் இருதயம், நரம்பியல், சுவாச மண்டலம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் பரிசோதனை செய்யப்பட்டு, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து பயனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை அட்டை, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை, சக்கர நாற்காலி, காதொலிக்கருவி, முழங்கை தாங்கி உள்ளிட்ட பல நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.
இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், மருத்துவத் துறை ஊரகப் பணிகள் இணை இயக்குநா் தீா்த்தலிங்கம், திமிரி ஒன்றியக் குழுத் தலைவா் அசோக், துணைத் தலைவா் ரமேஷ் சிறப்பு மருத்துவா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

