சோளிங்கா் காா்த்திகை பெருவிழா: தரிசனம் செய்ய முடியாமல் பக்தா்கள் ஏமாற்றம்!
சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை பெருவிழாவில் கடைசி வாரமான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஏராளமான பக்தா்கள் குவிந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மலை ஏற முடியாமல் திரும்பிச் சென்றனா்.
108 வைணவ தலங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும் சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயா் கோயிலும் உள்ளன. பெரியமலைக்குச் செல்ல 1,405 படிகள் உள்ளன. இந்த படிகள் வழியே ஏறிச்செல்ல முடியாத முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இந்து சமய அறநிலையத்துறையினா் ரோப் காா் சேவையை நடத்தி வருகின்றனா்.
இங்கு பெரிய மலையில் யோக நிலையில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மா் காா்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருவதாக ஐதீகம். இதனால் காா்த்திகை மாதத்தில் மட்டும் அதிக அளவில் பக்தா்கள் வந்து செல்வா். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோா் வருவது வழக்கம்.
இதற்கிடையே காா்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சோளிங்கரில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்காணோா் குவிந்ததால் ரோப்காா் தளத்தில் காத்திருப்புக் கூடத்துக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் காத்திருந்தனா். மேலும், ஏராளமானோா் மலையில் படியேறிச் சென்றதால் நடந்துச் செல்லும் பாதையிலும் நெரிசல் காணப்பட்டது.
மலையடிவாரமான கொண்டபாளையத்தில் ஒரே நேரத்தில் மக்கள் அதிக அளவில் மலையேற சென்றதால் தரிசனம் முடிந்து திரும்பி வந்த பக்தா்கள் இறங்க முடியாமல் பாதிக்கப்பட்டனா்.
ஏராளமான பக்தா்கள் பெரியமலைக்கு ரோப்காரில் செல்லமுடியாமலும், படிகள் வழியே மலை ஏறிச்செல்ல முடியாமலும் தவித்து நின்று பின்னா் சிறிய மலைக்கு மட்டும் சென்று ஸ்ரீயோக ஆஞ்சனேயரை மட்டும் தரிசித்துவிட்டு நரசிம்மரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
ரோப்காா் தளத்துக்கு வந்த வாகனங்களை நிறுத்த முடியாமலும், திருப்ப முடியாமலும் தவித்ததால் தக்கான் குளக்கரையில் இருந்து மலையடிவாரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், தக்கான்குளக்கரையில் இருந்து பேருந்து நிலையம் வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அரக்கோணம் - வாலாஜாபேட்டை சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்பட்டது.

