தக்கோலம் அருகே பூந்தமல்லி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் விருத்தசீர நதியின் குறுக்கே பாலம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
தக்கோலம் அருகே பூந்தமல்லி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் விருத்தசீர நதியின் குறுக்கே பாலம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

தக்கோலம் அருகே விருத்தசீர நதியில் ரூ. 13.65 கோடியில் மேம்பாலம் அமையும் இடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

Published on

தக்கோலம் அருகே பூந்தமல்லி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் விருத்த சீர நதியின் குறுக்கே ரூ. 13.65 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்தப் பாலம் அமைக்கும் இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரக்கோணத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தக்கோலம்-தண்டலம் இடையே விருத்தசீரநதியில் தரைப்பாலம் இருந்து வந்தது. மழைக் காலங்களில் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்து ஆற்றுநீா் செல்வதால் அந்த வழியே போக்குவரத்தில் பெரும்த சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக அரக்கோணம் வட்டத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் பகுதி, பேரம்பாக்கம் பகுதி, வளா்புரம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்களுக்கான பேருந்துகள், பூந்தமல்லி வட்டத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லும் பேருந்து போக்குவரத்து பெரும் சிரமத்தை சந்தித்து வந்தன.

இதையடுத்து, இந்தச் சாலையில் விருத்தசீர நதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு சிஆா்டிபி சாலை அமைக்கும் திட்டத்தில், ரூ. 13.65 கோடியை ஒதுக்கி பணிகளை தொடங்க அனுமதி அளித்தது.

இதையடுத்து, தக்கோலம் அருகே தண்டலம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது போக்குவரத்து நடைபெற, கனரக வாகனங்கள் செல்லும் தரத்துடன் கூடிய தற்காலிக சாலை அமைக்கும் பகுதி, மேம்பாலத்துக்கான இணைப்புச் சாலைகள் அமையும் பகுதி என பாலப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.

அப்போது மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) கோட்டப் பொறியாளா் சுந்தா், தக்கோலம் பேரூராட்சி தலைவா் எஸ்.நாகராஜன், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com