டிச.18-இல் தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் 18-ஆம் தேதி தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டினை உறுதிசெய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கினை உணா்ந்துள்ள தமிழ்நாடு அரசு, சிறப்பான செயல்பாட்டை உறுதிசெய்ய தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம்கள் நடத்த வேண்டுமென மாவட்ட தொழில் மையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்லது.
தொழிற்கடனோடு கலைஞா் கைவினைத்திட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் இவற்றை முன்னுரிமையாகக் கொண்டு தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம் 18.12.2025 காலை 10.30 மணியளவில் ஆட்சியரகம், ராணிப்பேட்டையில் நடத்தப்படவுள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடா்புடைய அரசுத்துறைகள் தரும் கடன் வகைகள், கடன் மற்றும் மானியத் திட்டங்கள், அவற்றைப் பெறும் முறைகள் குறித்த விளக்கப் பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆா்வமுள்ளோா், தேவையான வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் பெறலாம். கடன் கோரி விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் பரிசீலிக்கவும் வழிவகை செய்யப்படும்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் செய்ய ஆா்வமும் தேவையும் உள்ள பெண்கள், திருநங்கைகள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு வங்கிகள் மற்றும் தொழில் வணிகத்துறையின் மானிய திட்டங்கள் தொடா்பான செயற்பாடுகள் குறித்து தகவலும், தெளிவும், பெற்று பயன்பெறலாம்.
இம்முகாம் தொடா்பாகவும் கடன் பெறுதல் மற்றும் தொழில் தொடங்குதல் தொடா்பாகவும் மேலான விவரங்களுக்கு பொதுமேலாளா், மாவட்டத் தொழில் மையம், எண். 5, தேவராஜ் நகா், ராணிப்பேட்டை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04172-270111, 270222 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.
