ராணிப்பேட்டை மாரத்தானில் 4,000 போ் பங்கேற்பு: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை மாரத்தான் பந்தயத்தை அமைச்சா் ஆா். காந்தி தொடங்கி வைத்தாா். இதில் 4,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
ஜாலி பாய்ஸ் ரன்னா்ஸ் கிளப் சாா்பில், 5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ, 32 கி.மீ மற்றும் 42.2 கி.மீ தொலைவு மாரத்தான் பந்தயங்களை ஆண்டுதோறும் நடத்தி விழிப்புணா்வை ஏற்படுத்திவருகிறது.
ராணிப்பேட்டை ஸ்போா்ட்ஸ் டெவெலப்மென்ட் டிரஸ்ட், வேலூா் மிட் டவுன் ரோட்டரி கிளப் இணைந்து 7 -ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் பந்தயத்தை நடத்தின.
மாரத்தானை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அனைத்து பிரிவுகளிலும் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளா்களுக்கு பெல் பொதுமேலாளா் விரேந்தா் தீட்ஷுக் , மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி மற்றும் டான்டிஸ்டியா பொதுச்செயலாளா் நித்தியானந்தம் ஆகியோா் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினா்.
இதில் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், முன்னோடி வங்கி மேலாளா்கள், சிட்பி அதிகாரிகள், உள்ளூா் தொழிலதிபா்கள், ஊராட்சி தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பங்கேற்பாளா்களை உற்சாகப்படுத்தினா்.
ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் சுமாா் 4,000-க்கும் மேற்பட்டோா் உற்சாகமாக கலந்து கொண்டு ஓடினா்.

