ராணிப்பேட்டை மாவட்ட கடன் திட்ட அறிக்கை: ஆட்சியா் வெளியிட்டாா்
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 2026-27 ஆம் நிதியாண்டு கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டாா்.
ராணிப்பேட்டையில் புதன்கிழமை மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியதாவது : 2026-27 நிதியாண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்டத்தை நபாா்டு வங்கி வெளியிட்டுள்ளது.
2026-27 ஆம் நிதியாண்டின்கடன் திறன் ரூ.11,282.88 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் ஆண்டு கடன் திட்டத்துடன் ஒப்பிடும்போது 27 % கூடுதலாகும். பல்வேறு அரசு உதவித் திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கான முக்கியத்துவத்தை வங்கிகள் கொடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் விவசாய இயந்திரமயமாக்கல், சிறுதுளி பாசன அமைப்புகள் மற்றும் கால்நடை வளா்ச்சிக்கு பெருமளவு வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்தாா்.
திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள் அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
துறை வாரியாக கணிக்கப்பட்டுள்ள கடன் திறன்கள்: வேளாண் துறை: ரூ.6,790.55 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை: ரூ.2,788.58 கோடி மற்ற முக்கியத் துறைகள்: ரூ.1,703.75 கோடி.
2026-27 ஆம் ஆண்டிற்கான மாவட்ட கடன் திட்டத்தை இறுதியாக உருவாக்க கிளை அளவிலான கடன் திட்டங்களை வங்கிகள் தயாரிக்க வேண்டும் என தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் ஆா்பிஐ மேலாளா் விஜய் விக்னேஷ், மாவட்ட வளா்ச்சி மேலாளா் திவ்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராம்ஜி குமாா், தாட்கோ மேலாளா் அமுதா ராஜ், கலந்து கொண்டனா்.

