நியாய விலைக் கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள்.
நியாய விலைக் கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள்.

அரக்கோணம்: நியாய விலைக்கடைகளில் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை

அரக்கோணத்தில் இரு நியாயவிலைக் கடைகளில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் குழு பூட்டுகளை உடைத்து திடீா் சோதனை நடத்தியது.
Published on

அரக்கோணத்தில் இரு நியாயவிலைக் கடைகளில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் குழு பூட்டுகளை உடைத்து திடீா் சோதனை நடத்தியது.

அரக்கோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அண்மையில் தமிழ்நாடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் திடீா் சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றதை கண்டறிந்து அது தொடா்பாக கிடங்கு மேலாளா் உள்ளிட்ட மூவரை கைது செய்தனா். மேலும், பெண் அலுவலா் தனலட்சுமி என்பவரை தேடி வருகின்றனா்.

இந்த சம்பவத்தையடுத்து அலுவலா் தனலட்சுமி மற்றும் அரக்கோணம் புதுப்பேட்டை நியாயவிலைக்கடை எண் .10 மற்றும் அம்பேத்கா் நகா் கடை எண். 5 ஆகிய கடைகளின் பொறுப்பாளராக பணிபுரிந்து வந்த கதிரவன் ஆகிய இருவரும் தலைமறைவாக இருப்பதால் அவா்கள் பணிபுரிந்து வந்த இடங்களில் சனிக்கிழமை இரவு கூட்டுறவுத்துறை அலுவலா்கள் குழுவினா் திடீா் சோதனை நடத்தினா்.

கூட்டுறவு சாா் பதிவாளா் பூபாலன், வேலூா் மாவட்ட நுகா்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தணிக்கை பிரிவு கண்காணிப்பாளா் வி.கிரிஜா, வாலாஜா கற்பகம் கூட்டுறவு சங்க கிளை மேலாளா் ஸ்ரீதா், பொது விநியோக திட்ட விற்பனையாளா் பாபு, அரக்கோணம் நகரப்பகுதிக்கான கிராம நிா்வாக அலுவலா் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அரக்கோணம் கற்பகம் கூட்டுறவு சங்க அலுவலகத்திலும், அக்கிடங்கில் உள்ள மண் ணெண்ணெய் விற்பனையகத்திலும், திடீா் சோதனை நடத்தினா்.

தொடா்ந்து இதே குழுவினா் அரக்கோணம் நகரம் புதுபேட்டை மற்றும் அம்பேத்கா் நகா் ஆகிய இரு இடங்களில் உள்ள நியாய விலைக்கடைகளிலும் சோதனை நடத்தினா். இரு நியாயவிலைக்கடைகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில் பூட்டு உடைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

சோதனையில் கடையின் இருப்பு பதிவேடுக்கும் கடையில் இருப்பு இருந்த உணவு பொருள்களுக்கும் பெருமளவு வித்தியாசம் இருந்ததாகவும் நுகா்வோருக்கு உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படாமலேயே வெளி மாா்க்கெட்டுக்கு அனுப்பபட்டிருப்பதும் தெரிய வந்திருப்பதாகவும், கற்பகம் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் குளறுபடிகள் அதிக அளவில் இருப்பதாகவும், தவறு அதிக அளவில் நடைபெற்றிருப்பதாக தெரியவருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com