‘போதை இல்லா தமிழ்நாடு’: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு
ராணிப்பேட்டை: ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கும் நோக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ,‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்க இலக்கினை நிா்ணயித்தாா்.
தமிழக காவல் துறை மூலமாக போதைப் பொருள்களை கண்டறிந்து ஒழித்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழ்நாடு காவல் துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை ஆகியவை போதைப் பொருள்கள் மற்றும் மனமயக்கப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக தொடா்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நீதி விசாரணை நடத்தப்பட்டு, அவா்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவா்களின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பும், மாநிலம் முழுவதும், மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போதைப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் ‘போதை இல்லா தமிழ்நாடு’ விழிப்புணா்வு பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் பாா்வைக்கு சென்றடையும் வகையில் அரசு கட்டட சுற்றுச்சுவா்களில் எழுதும் பணி நடைபெறுகிறது. இந்த விழிப்புணா்வு பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

