விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
‘வரும் டிசம்பா் முதல் விடுபட்டவா்களுக்கும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.43.74 கோடியில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் ரூ.24.34 கோடியில் கட்டப்படவுள்ள 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 72,880 பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கியும் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
73,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 55,000 போ் மகளிா் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முதல்வா் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் முன்னேற்றத்துக்கான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் பொருளாதார தேவைக்காக யாரையும் எதிா்பாா்த்து இருக்காமல் தங்களது சொந்தக் காலில் நிற்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் நிறைவேற்றி வருகிறாா்.
அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணத்தில் 820 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டுள்ளனா். இதன்மூலம் ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை சேமிக்கின்றனா். ராணிப்பேடை மாவட்டத்தில் மட்டும் சுமாா் 8 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டுள்ளனா். இதுதான் திட்டத்தின் வெற்றி.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது. காலை உணவுத் திட்டத்தின் மூலம் தினமும் சுமாா் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினமும் 25,000 குழந்தைகள் பயன் பெறுகின்றனா்.
நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் உள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றபோது எவ்வளவு கடன் சுமை, எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்தன.
ஆனால், மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறாா். இந்த திட்டத்தின் கீழ் சுமாா் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.70 லட்சம் மகளிா் பயன் பெற்று வருகின்றனா். இத்திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு வரும் டிசம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகையை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், எம்எல்ஏ-க்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஏ.எம். முனிரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

